கனடாவின் அடிப்படை உட்கட்டமைப்புக்கான முதலீட்டுத் திட்டம், அதன் முன்னுரிமைகள்

ஒன்ராறியோ மாநில அரசாங்கமானது மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயற்படுத்தும் பன்முனைப்படுத்தப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் கீழ், சமூக, கலாச்சார, பொழுதுபோக்குத் துறைகளுக்கான விண்ணப்பங்களை செப்ரெம்பர் 3ம் திகதி கோரியுள்ளது. மத்திய அரசானது மாநில அரசின் திட்டங்களின் நோக்கங்கள், வழிகாட்டல்களுக்கு அமைவான, தகமை பெறும் திட்டங்களுக்கு வருகின்ற பத்தாண்டுகளுக்கு 407 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்படி ஒவ்வொரு செயற்திட்டத்துக்கான கட்டுமானச் செலவில் மத்திய அரசு 40 விழுக்காடு நிதியினையும், மாநில அரசு 33.3 விழுக்காடு நிதியினையும் வழங்கும் அதேவேளை விண்ணப்பதாரர்களிடம் இருந்து 26.7 விழுக்காடு நிதிப்பங்களிப்பை எதிர்பார்க்கின்றது.

இந்த திட்டம் தமிழ்ச்சமூக மையம் ஒன்று அமைப்பதற்கான எமது செயற்திட்டத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. எமது செயற்திட்டமானது அரசின் இங்குள்ள மூத்த குடிகள், மற்றும் நலினமடைந்த சமூகங்கள் உள்ளிட்ட ஒண்டாரியோவின் அனைத்து குடிமக்களுக்கும் சமூக, கலாச்சார, பொழுதுபோக்கு வசதிகளும் வாய்ப்புகளும் சேவைகளும் தடைகளைத் தாண்டி அவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் திட்டத்துடன் ஒத்திசைந்துள்ளது. எமது தமிழ்ச் சமூக மையம் முன்னெடுத்துள்ள கருத்துக் கணிப்பீடுகளும் ஆய்வுகளும் இவ்விதமான மக்களின் தேவைகளை அவர்களிடமிருந்தே பெற்று அவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளது. அத்தோடு இத்தேவைகளுக்கான சேவைகள் இச் சமூகத்தின் மத்தியிலே இல்லாமல் இருப்பதை அல்லது அரிதாகவும், தூரத்திலும் இருப்பதையும் எமது ஆய்வுகள் உறுதி செய்துள்ளமை எமது விண்ணப்பத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. எமது பன்முகப்படுத்தப்பட்ட பரவலான செயற்பாடுகள் நலினமடைந்துள்ள மக்களையும் உள்வாங்கிஒருங்கிணைந்து செயற்படவுள்ளமை கனடாவின் அடிப்படை உட்கட்டமைப்புக்கான முதலீட்டு திட்டத்தில் கூறப்பட்டுள்ள முதன்மைப்படுத்தப்படுள்ள அம்சங்களுடன் ஒத்திசைந்துள்ளது.

கனடாவில் முதலிடுதல் உட்கட்டுமான செயற்றிட்டத்தின் முதன்மை நோக்கங்கள்

இந்தச் செயற்றிட்டத்தால் அடையாளங்காணப்பட்டுள்ள நோக்கங்களும் தமிழ் சமூக நிலைய செயற்றிட்டத்தால் கருத்துக்கணிப்புகள் மூலம் அடையாளங்காணப்பட்டுள்ள நோக்கங்களும் ஒன்றுடனொன்று கச்சிதமாகப் பொருந்தி குமுக அங்கத்தவர்களுக்கு பல்வேறு சேவைகளும் கிடைக்கப்பெறச் செய்வதற்கான உறுதியானதொரு வழியை ஏற்படுத்துகின்றன. கருத்துக்கணிப்பின்மூலம் குமுகத்தினர் தமக்கு வேண்டிய முக்கியமான சேவைகளென அரங்கு, உடற்பயிற்சிக் கூடம், உளநல சேவைகள், பெண்களுக்கான சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்திட்டங்கள், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றை அடையாளங்காட்டியிருந்தனர். இவை தமிழ்க் குமுகத்தினர் தொடர்ந்தும் சேவைக்குறைபாடுளை எதிர்நோக்கிவரும் விடயங்களை ஒத்திருக்கின்றன. இவை பலநோக்குடைய வடிவமைப்பு, பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள்தொகையினருக்கு ஒன்றிணைந்த சேவை வழங்கல் ஆகிய கனடாவில் முதலிடுதல் உட்கட்டுமான செயற்றிட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாய் அமைகின்றன.