பூர்வகுடிகளுடனான கலந்தாய்வுகள்

தமிழ் சமூக மையம் கட்டியெழுப்பப்படவிருக்கும் நிலமானது கிறெடிற் ஆற்றின் மிசிசாகாவினர், அனிஷனாபேயினர், சிப்பேவாவினர், ஹொடனசோனீயினர் உள்ளிட்ட பல தேசிய இனங்களின் பூர்வீக நிலமென்பதையும், தற்போது பல்வேறு முதற்குடியினரினதும், இனுவிற் மக்களினதும், மேற்றி மக்களினதும் வாழிடமாக இருக்கிறது என்பதையும் தமிழ் சமூக மையம் ஏற்றுக்கொள்கிறது. தொரன்தோ நிலப்பரப்பு கிறெடிற் ஆற்றின் மிசிசாகாவினருடன் கைச்சாத்திடப்பட்ட பதின்மூன்றாம் உடன்படிக்கைக்கும், பல்வேறு மிசிசாகா மற்றும் சிப்பேவா குழுக்களுடன் கைச்சாத்திடப்பட்ட வில்லியம்ஸ் உடன்படிக்கைகளுக்கும் உட்பட்டது என்பதையும் தமிழ் சமூக மையம் ஏற்றுக்கொள்கிறது.

இந்தச் செயற்றிட்டத்தின் வெற்றிக்கென பூர்வகுடிக் குமுகங்களுடன் ஒத்திசைந்து செயலாற்ற தமிழ் சமூக மையம் திடம்பூண்டுள்ளது. ஹியுரோன்-வென்டற் மக்களினதும் கிறெடிற் ஆற்றின் மிசிசாக முதற்குடியினதும் பிரதிநிதிகளுடன் நாம் அடிக்கடி தொடர்பாடி, அவர்களுடனான எமது உறவைத் தொடர்ந்தும் வளர்த்து வருவதோடு, செயற்றிட்டம் பற்றிய நிலவரத்தையும் தெரிவித்து வருகிறோம்.

இந்த நிலம் பற்றி நாம் மேலும் அறிந்துகொள்ளும்பொருட்டு, தொரந்தோ மாநகரமானது, பூர்வகுடிக் குமுகங்களின் கள ஆய்வுத் துணையுடன்கூடிய தொல்பொருட் கணிப்பீடு ஒன்றை 311 ஸ்ரெயின்ஸ் வீதியிலே நடத்தியது. அக்கறையுடன் நுண்ணாய்ந்தபோதும் எந்தவொரு தொல்பொருட்களோ, தொல்பொருள் எச்சங்களோ இந்தக் கணிப்பீட்டிலே கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் கடிதமூலமாக மாநகராட்சி உறுதிசெய்துள்ளது. இந்தக் காணியின் கிழக்கு எல்லைப்பகுதிலே மேலும் கணிப்பீடுகள் நடத்தப்படுவதை நாம் ஆதரிக்கிறோம். இதை ஏற்கனவே மாநகராட்சி ஏற்றுக்கொண்டு மேலதிக கணிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கிறது.

311 ஸ்ரெயின்ஸ் வீதி போன்ற நீருக்கு அண்மையான நிலங்கள் பெரும்பாலும் தொல்பொருட் கணிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஏனெனில், நீர் அத்தியாவசியமானதொரு வளமாக இருப்பதால், அதையண்டிக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது நம்பகமானது.

பூர்வகுடி அலுவல்கள் செயலகத்தாலும் தொரந்தோ மாநகராலும் மேலதிகமாக ஒழுங்குசெய்யப்படும் பூர்வகுடிக் குமுகங்களுடனான பொதுக் கலந்தாய்வுகளில் பங்கெடுக்க நாம் ஆவலாய் உள்ளோம். இந்த நிலத்தின் வரலாற்றுக்கும் பூர்வகுடிகளின் பாரம்பரியங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலே ஒத்திசைவுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கவென நாம் தொரந்தோ நகராட்சியுடனும் பூர்வகுடிக் குமுகங்களுடனும் தொடர்ந்தும் பணியாற்றுவோம்.