ஆளுகை

எட்டு அங்கத்தவர்களைக் கொண்ட வழிபடுத்துக் குழுவொன்று மார்ச் 2019ல் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் குமுக அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவானது 3 மாதகாலங்களுக்கு ஒரு இடைக்காலக் குழுவாகச் செயற்பட்டு, தமிழ் சமூக மையம் அமைக்கும் செயற்றிட்டத்தை எப்படி முன்னகர்த்துவது என குமுகத்திற்கு பரிதுரைக்கவேண்டும் எனக் கோரப்பட்டது.

தற்பொழுது சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடாக இந்த எண்மரையும் ‘முதல்’ இயக்குனர்களாகக்கொண்டு, வழிபடுத்துக்குழு இயக்குனர் சபையாக சட்டப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ற் 2019ல் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்மொழியப்பட்டபோது, பின்வரும் 3 காரணங்களையும், வழிபடுத்துக்குழு குறுகிய காலத்தில் அடைந்த பெறுபேறுகளையும் கருத்தில்கொண்டு குமுகத்தால் அந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  1. வழிபடுத்துக்குழு தொறொன்ரோ நகர முதல்வரின் அலுவலகத்துடனும், தொறொன்ரோ நகர சபையுடனும் மேற்கொண்ட தொடர்பாடல்களின் பயனாக, 2020ம் ஆண்டின் இளவேனில் அல்லது கோடை காலத்தில் ஸ்காபரோவின் வடகிழக்குப் பகுதியில் சமூக மையத்திற்குத் தேவையான காணியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பொன்றைப் பெற்றது. இந்தக் காணியை இந்தத் திட்டத்திற்காக நகரசபை ஒதுக்கவேண்டுமானால், வழிபடுத்துக்குழு நகரத்துடன் குத்தகை ஒப்பந்தமான்றில் கைச்சாத்திடவேண்டும். சட்டப்பதிவு செய்யப்பட்ட ஒரு குழுவே அங்ஙனம் கைச்சாத்திட முடியும்.
  2. அதேநேரத்தில், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மொத்த செலவீனத்தில் 73 விழுக்காட்டை மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கக்கூடிய ஒரு வாய்ப்பும் தென்பட்டது. இந்த விண்ணப்பத்தை மேற்கொள்ள குழு சட்டப்படி பதிவு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.
  3. இந்தத்திட்டம் வெற்றியடையவும் நிதிநிலைப்படி தக்கவைக்கக்தக்கதாக இருக்கவும் வேண்டுமானால், இந்தத் திட்டம் தொடக்கமுதலே அறநிலையமாக பதிவுபெற்றிருக்க வேண்டும் என குழு கருதுகிறது. அறநிலையங்களுக்கு வழங்கப்படும் கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதால், அது கட்டுமானத்திற்கான கொடைகளைப் பெறவும், செயற்பாட்டுக்கான தக்கவைக்கத்தக்கதொரு வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்கவும் உதவும். குழுவை சட்டப்படி பதிவுசெய்வது, அறநிலையமாக சமூக மையத்தைப் பதிவுசெய்வதற்கான படிமுறைச் செயற்பாடுகளை தொடக்கி வைக்கும்.

Tஎமது சமூகத்திற்கு சமூக மையத்திற்கான ஆளும் கட்டமைப்பை தீர்மானிப்பது இத்திட்டத்தின் முக்கியமானதொரு விடயம் என்பதை நாம் அறிவோம். தனி நபர்களுடனும் நிறுவனங்களுடனும் நேரம் எடுத்து, ஆழ்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபடுவதன்மூலம் மட்டுமே இத்தீர்மானங்களை அடைய முடியும் என்றும் நாம் அறிவோம். ஆகையால், இல் வைகாசி துடங்கி ஆவணி மாதம் வரை சமூகத்துடன் ஆளும் கட்டமைப்பு குறித்து ஆலோசனைகளில் ஈடுபடுவோம். அடுத்த வருடம் இத்தலைப்பின்கீழ் நடைபெறக்கூடிய வலுவான விவாதத்தையும், அதன்மூலம் உருவாகக்கூடிய பிரதிநிதித்துவமான ஆளும் கட்டமைப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கி பணியாற்றி வருகிறோம். இந்த விடயத்தில் எமது குழு குமுகத்துடன் எவ்வாறு தொடர்பாடலாம் என்பது பற்றிய வேறேதும் கருத்துகள் உங்களிடம் இருந்தால் எமக்கு info@tamilcentre.ca என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த தயங்கவேண்டாம்.