மக்கட்தொகைசார் தேவைகள்

வடகிழக்கு ஸ்கார்பரோவிலும் தென்கிழக்கு மார்க்கத்திலும் வசிக்கும் மக்கள் அவசியமான சமூக வேவைகளைப் பெற்றுக்கொள்வதில் - குறிப்பாக ஒரு சமூக நிலையத்தில் அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளையும் பொழுதுபோக்கு வசதிகளையும் பெற்றுக்கொள்வதில் - பலத்த சவால்களை எதிர்கொள்கிறார்கள். தொறொன்ரோ நகர மையத்தாலும் ஸ்காபரோ சமூக சேவை அமைப்புக்களாலும் நிர்வகிக்கப்படும் சமூக நிலையங்களின் வரைபடத்தை மேலோட்டமாக நோக்கினாலே குறிப்பிட்ட பகுதியிலே இந்தச் சேவைகளின் குறைபாடு துல்லியமாகத் தென்படும். (காண்க உரு 4 மற்றும் உரு 5). தொறொன்ரோ பெரும்பாகத்திலேயே ஸ்காபரோவே வேலைசெய்தும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஸ்காரோவின் வடபகுதி ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளையுமே பேச முடியாதவர்கள் கணிசமான அளவில் வாழும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசவதிவிடங்களுக்கு உள்ள குறைபாடு காரணமாக கணிசமான எண்ணிக்கையிலானோர் வீடுகளிலே அறைகளை மட்டும் வாடகைக்கெடுத்துத் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் காணலாம்.

City of Toronto run community centres in the Scarborough area, showing underserved region in Northeast Scarborough.

Fஉரு 4: ஸ்காபரோ பகுதியிலே தொறொன்ரோ நகரசபையால் நிர்வகிக்கப்படும் சமூக நிலையங்கள். இது வடகிழக்கு ஸ்காபரோவிலே சேவைகளுக்குக் குறைபாடு உள்ளதைக் காட்டுகிறது.

இவ்வாண்டின் ஒக்டோபர் மாதத்திலே இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் மார்க்கம் நகரின் தென்பகுதியில் நடத்தப்பட்ட கணிப்பு ஒன்றை ‘யுனைற்றட் வே’ அமைப்பு வெளியிட்டபோது அதிலிருந்து இப்பகுதியிலும் வடகிழக்கு ஸ்காபரோவில் உள்ளதுபோன்ற சேவைக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. அணுகக்கூடிய கட்டுப்படியான பொது வெளிகளுக்கான குறைபாடு, கட்டுப்படியான சேவைகளுக்கான குறைபாடு, உளநல சேவை வளங்குனர்களுக்கு பண்பாட்டுப்பின்னணிபற்றிய அறிவின் போதாமை, புதிய குடிவரவாளர்களுக்கான தாய்மொழியிலான சேவைகளினதும் மொழிமாற்ற சேவைகளினதும் தட்டுப்பாடு, வேலை நிலையின்மை, வேலையில் முன்னேறுவதற்கான வாய்புகளின்னை உள்ளிட்ட இந்தக் குறைபாடுகள் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குமுகங்களையே பெரிதும் தாக்கும் என்பது தெளிவு. சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு குமுகங்களையும் பாதிக்கும் இந்தக் குறைபாடுகளை தமிழ் சமூக மையத்தில் உருவாக்கும் செயற்றிட்டங்களால் நிவர்த்தி செய்யலாம்.

ஸ்காபரோ வாழ் மக்கள் எதிர்நோக்கும் மூன்று முக்கிய சவால்களை தெளிவாக அடையாளம் காணலாம், அவையாவன: உறையுளுக்கான செலவினங்கள்போக அவர்களின் வருமானம் அரசவதிவிடங்களில் வசிப்பவர்களினதைவிடவும் கணிசமான அவவு குறைவானதாய் இருக்கின்றமை, வேலையிடங்களையும் சேவைபெறும் இடங்களையும் சென்றடைய அவர்கள் பயணிக்கவேண்டிய நேரம் மிக அதிகமானதாய் இருக்கின்றமை, தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் ஒரு கட்டமைப்பிற்கு தமது தேவைகளை தெரியப்படுத்த அவர்களுக்கு தெளிவானதொரு வழியின்றி இருக்கின்றமை. இந்தச் சவால்கள் அவர்கள் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைய வழிசெய்கிறது. நீண்ட பயண நேரங்கள் அவர்கள் தங்களின் தொழில்சார் முன்னேற்றத்திற்கு ஒதுக்கக்கூடிய நேரத்தை கட்டுப்படுத்தி அவர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை மட்டுப்படுத்துகிறது. அவர்களுக்கு சுகாதார சேவைகளை நாடவும், வாக்குரிமையை பயன்படுத்தவும், தமது குடும்பங்களுடனும் சுற்றத்துடனும் இன்பமாகக் கழிக்கவும் போதியளவு நேரம் இல்லாமையால் அவர்களின் உடல்-உள நலம் பாதிக்கப்படுகிறது. அக்கம்பக்கத்தில் அபிவிருத்தி தேவைப்படும் பகுதிகளை வரையறுப்பதற்கான தரவுகளில் அவர்கள் போன்றவர்களின் ஏழ்மை நிலையோ தேவைகளோ பதிவுசெய்யப்படாததால் நிரந்தரமாக அவர்கள் ஒரு சமூகபொருளாதார வெற்றிடத்திலே சிக்குண்டு விடுகிறார்கள் (காண்க உரு 5).

City of Toronto run services and programs in the Scarborough area, showing underserved region in Northeast Scarborough.

உரு 5: ஸ்காபரோ பகுதியிலே தொறொன்ரோ நகரசபையால் வழங்கப்படும் சேவைகளும் செயற்றிட்டங்களும். இது வடகிழக்கு ஸ்காபரோவிலே சேவைகளுக்கு குறைபாடுள்ள பகுதியை காட்டுகிறது.

இத்தகையதொரு முக்கியமான வெற்றிடத்திலே சேவை வழங்கலை ஒருங்கிணைக்கக்கூடிய பல்நோக்கு மையம் ஒன்றை உருவாக்க தமிழ் சமூக நிலையத்தை உருவாக்கும் திட்டம் முனையும். வடகிழக்கு ஸ்காபரோவாழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை தெரிந்துவைத்துள்ள -அதேவேளை இத்தகைய சேவைகள் தென் மார்க்கம் மற்றும் பிக்கறிங் நகர மக்களுக்கும் நன்மை பயக்கும் என அறிந்துவைத்துள்ள - குமுக மற்றும் அயல் அமைப்புகளுடனான சந்திப்புகள் மூலமும் இணைய வழியான கருத்துக் கணிப்புகள் மூலமும் பெறப்பட்ட தரவுகளால் உந்தப்பெற்றே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அயலில் அபிவிருத்தி தேவைப்படும் பகுதிகளை வரையறுப்பதற்கான தரவுகளில் பிரதிபலிக்கப்படாத வடகிழக்கு ஸ்காபரோவின் ஏழ்மை நிலையையும் சேவைகளுக்கான தேவையையும் தெளிவுபடுத்தும் வகையிலே சேகரிக்கப்பட்டுள்ள தரவுகள் இந்தத் திட்டத்திற்கு மிக முக்கியமானவை (காண்க உரு 6 மற்றும் உரு 7).

Map identifying the area of residence of consultation survey respondents.

உரு 6: கருத்துக்கணிப்பிலே பங்குபற்றியவர்களின் குடியிருப்புப்பகுதிகளைக் காண்பிக்கும் வரைபடம்.

Maps identifying the area of residence of consultation survey respondents. Focused on concentrated respondent area of Northeast Scarborough.

உரு 7: கருத்துக்கணிப்பிலே பங்குபற்றியவர்களின் - குறிப்பாக வடகிழக்கு ஸ்காபரோவைச் சேர்ந்தவர்களின் - குடியிருப்புப்பகுதிகளைக் காண்பிக்கும் வரைபடம்.

தமிழ் சமூக மையம் இயங்கத்தொடங்கியபின் அதன் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு கருத்துக்கணிக்கும் செயற்பாடு தொடர்கிறது. இந்த செயற்திட்டம் தமிழ் சமூகத்தால் முன்னெடுக்கபட்டபோதும் ஏனைய பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்றும் விளிம்புநிலை குமுகங்களின் நலன்களையும் தேவைகளையும் கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது. இதில் தமிழர்கள் எதிர்நோக்குவதுபோன்ற தடைகளையும் சவால்களையும் எதிர்நோக்கும் கரிபியன் குமுகங்களும் பூர்விக குடிக் குமுகங்களும் உள்ளடங்கும்.

இந்த குமுகங்களின் அகத்தேயும் மாற்றுப் பாலுறவினர் மற்றும் மாற்றுப் பாலடையாளத்தினர், மாற்றுத் திறனாளிகள், மனநலன் குன்றியோர், குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் அவர்களுக்கான சேவைகள் கிடைக்கப்பெறாதபோது மேலதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். பால் பொதுவான கழிப்பறைகள், மொழிபெயர்ப்பை அனுமதிக்கும் அரங்க அமைப்பு, சில்லுநாற்காலிகளை அனுசரிக்கும் வடிவமைப்பு என்பன தமிழ் சமூக மையத்தை அணுகுதவற்கிலகுவானதொரு மையமாக மாற்றும். வடகிழக்கு ஸ்காபரோவின் இந்தப் பகுதியில் ஒரு சமூக மையம் அமைவது - அவசியம் தேவையான பொழுதுபோக்குக்கான வெளிகளையும் சேவைத்திட்டங்களையும் வழங்குவதன் மூலம் - இந்தப் பகுதியில் வாழும் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்பது தெட்டத்தெளிவு. இதுவரை இனங்காணப்பட்ட தேவைகளின் அடிப்படையில் (காண்க உரு 8) மனநல சேவைகள், பெண்களுக்கான சேவைகள், மாற்றுப் பாலுறவினர் மற்றும் மாற்றுப் பாலடையாளத்தினர் சமூகத்தினை உள்வாங்குதல், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையிலான வடிவமைப்பு என்பன இந்த நிலையதின் உருவாக்கத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான விடயங்களாக கருதப்படுகின்றன.

Results of community consultation outlining priorities of programming needs.

உரு 8: குமுக கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி செயற்றிட்டங்களுக்கான தேவைகள்