செயற்குழுக்கள்

தமிழ் சமூக மையம் அர்ப்பணிப்பும் அனுபவமும் உடைய செயற்குழு உறுப்பினர்ளைத் தேடுகிறது.

தமிழ் சமூக மையத்திற்கு (த.ச.மை) கடந்த மூன்றாண்டுகளாக நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. உங்கள் ஆதரவின் பயனாய் 311 ஸ்ரெயின்ஸ் வீதியிலே பொருத்தமானதொரு அமைவிடத்தைப்பெறவும், 26.3மில்லயன் டொலர்களை அரச நிதியுதவியாகப் பெறவும், கட்டடத்தின் பூர்வாங்க வடிவமைப்பை வெளியிடவும், கனடாவிலே அறக்கொடை நிறுவனமாக பதிவுபெறவும் எம்மால் முடிந்தது.

இந்த முக்கிய அடைவுகளை எட்டிவிட்ட நிலையில் நாம் இப்போது எமது கவனத்தை செயற்பாட்டுத்; திட்டமிடல், ஆளுகை, நிதிதிரட்டல் ஆகிய விடயங்களை நோக்கித் திருப்புகிறோம். இந்த ஒவ்வொரு துறையிலும் தசமை வெற்றிகரமாக இயங்குவதற்கு உதவவென நாங்கள் செயற்குழுக்களை ஏற்படுத்துகிறோம். இதற்கு உங்களின் உதவி தேவை. இந்தச் செயற்குழுக்களில் இணைந்து வாரத்திற்கு குறைந்தது ஐந்து மணித்தியாலங்களையாவது இதற்காகச் செலவிடக்கூடிய அர்ப்பணிப்பும் அனுபவமும் உடைய தன்னார்வத்தொண்டர்களை நாங்கள் தேடுகிறோம். ஒவ்வொரு செயற்குழுவும் பற்றிய சுட்டுகை விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்பாடற் செயற்குழு

செயற்றிட்டம் பற்றிய தகவல்களை கூடியவளவு கிரமமாக வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். மின்னஞ்சற் தொடர்பாடல்களையும் ஊடக அறிக்கைகளையும் எழுதக்கூடியவர்களையும், சமூக ஊடகப் பதிவுகளை உருவாக்கக்கூடியவர்களையும், வரைகலை வடிவமைப்பாளர்களையும், ஆங்கிலத்தை தமிழிலே மொழியாக்கக்கூடியவர்களையும் தேடுகிறோம்.

சுட்டுகை விதிமுறைகள் காண்க

நிதிதிரட்டற் செயற்குழு

குமுகத்திடமிருந்து 9.6மில்லியன் டொலர்கள் நிதியை நாம் திரட்டவேண்டியுள்ளது. அரச நிதியுதவிக்கு நாம் விண்ணப்பித்தபோது, நாம் 11.2மில்லியன் டொலர்களுக்கான பற்றுறுதிகளைப் பெற்றிருந்தோம். குமுகத்திடமும், தொழில்நிறுவனங்களிடமும், தனியார்களிடமும் இருந்து பெற்ற அந்தப் பற்றுறுதிகளை நிதியாக மாற்றவேண்டிய தருணம் இது.

சுட்டுகை விதிமுறைகள் காண்க

ஆளுகைச் செயற்குழு

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடயம் இது. குமுகத்திற்கான ஆளுகைக் கட்டமைப்பு எத்தகையதாய் இருக்கும் என்பதற்கான கலந்தாய்வுத் திட்டமொன்றை நாம் உருவாக்க வேண்டும். இந்தக் கலந்தாய்வுகள் இவ்வாண்டின் கோடைகாலத்தில் இடம்பெறவேண்டும்.

சுட்டுகை விதிமுறைகள் காண்க

செயற்திட்டச் செயற்குழு

இந்தச் செயற்குழுவின் அங்கத்தவர்கள் கட்டுமானத்திலும் வரவுசெலவுத் திட்டமிடலிலும் பட்டறிவுபெற்றவர்களாய் இருந்து, செயற்றிட்டத்தை மாநில அரசத் திட்டமிடலிலிருந்து கட்டுமான நிறைவுக்கு இட்டுச்செல்வார்கள்.

சுட்டுகை விதிமுறைகள் காண்க

பயன்படுத்துனர் செயற்குழு

முதியோர், இளையோர், பால்புதுமையினர் (குயர்), பெண்கள் ஆகியோருக்கு சேவைகளை வழங்குகின்ற குமுக அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்தி குமுகத்திற்கான எமது செயற்பாட்டுத் திட்டங்களையும் சேவைகளையும் நாம் சீரமைக்கவுள்ளோம். ரொரன்ரோ மாநகருடன் உத்தியோகபூர்வ கலந்தாய்வுகளை மேற்கொள்ளவும் எமக்கு உதவி தேவைப்படுகிறது.

சுட்டுகை விதிமுறைகள் காண்க

செயற்குழுவில் இணைந்து விருப்பத்தொண்டாற்ற விரும்பினால் இந்த விண்ணப்பப்படிவத்தை 23 பிப்ரவரி 2024க்கு முன் பூர்த்தி செய்யுங்கள். செயற்குழுவிலே இணைந்து சிறப்பாகச் செயற்படக்கூடிய யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால் info@tamilcentre.ca என்ற மின்னஞ்சல் மூலம் அவர்களின் பெயரையும் தொடர்பு விபரத்தையும் 23 பிப்ரவரி 2024 க்கு முன் தெரியத்தாருங்கள்.