பின்னணி

குமுகம்

1960முதல் தென்னாசியாவினதும் கிழக்காசியாவினதும் - இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட - நாடுகளிலிருந்து கனடா வந்தடைந்த தமிழர்கள் தம்மை தமிழ்க் கனேடியர்கள் என அடையாளப்படுத்துவதில் பெருமைபாராட்டியிருக்கிறார்கள். 80களின் பிற்பகுதியில் இருந்து 2000ங்களின் முற்பகுதிவரை இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கனடா வந்தடைந்த தமிழர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்தது. 90களிலே கனடாவிலே அதிவேமாக வளர்ந்துவரும் அடையாளங்காணத்தக்க சிறுபான்மைக் குமுகமாக தமிழர்கள் இருந்தனர். 2016ம் ஆண்டின் கனேடிய குடித்தொகை மதிப்பீட்டின்படி, 240851 பேர் தம்மை தமிழர்கள் அல்லது தமிழைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தியபோது தென்னாசியாவிற்கு வெளியே அதிக தமிழரைக்கொண்ட நாடாக கனடா பெருமையடைந்தது. இவர்களிலே 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் தொறொன்ரோ பெரும்பாகத்திலேயே வசித்துவருகிறார்கள். கனடா வந்தடைந்த தமிழர்களிலே பெருந்தொகையானவர்கள் அரசியல் தஞ்சம்கோரியே இங்கு வந்திருந்தாலும், அவர்கள் பொதுவான ஒரு ஏதிலிசமூகம் போலல்லாது குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டு, உலகளாவிய புகழ்பெற்ற பல கலைஞர்களையும், கல்வியாளர்களையும் மட்டுமன்றி சிறந்ததொரு மாணவர்சமூகத்தையும், வெற்றிபெற்றுவரும் தொழில்முனைவர்களையும், அரசியலாளர்களையும் தம்மகத்தே கொண்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டிலே தமிழ் மரபு மாதப் பிரகடனம் கனேடிய பாராளுமன்றத்தால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அது கனேடிய குமுகத்திற்கு தமிழர்கள் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புகளையும், தமிழ்மொழியின் செழுமையையும் தொன்மையையும் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், தமிழ்க் குமுகத்தின் தொடர்ச்சியான கல்விசார் முனைப்பையும் அங்கீகரித்தது. எனினும் தொறொன்ரோ பெரும்பாகத்தில் தமிழர்கள் இப்போதும் தக்க சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாத ஒரு மக்கள்குழுவாகவே இருந்துவருகிறார்கள். பிற்காலங்களில் கனடாவை அகதிகளாக வந்தடைந்த தமிழர்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள பல சவால்களை எதிர்கொண்டதோடு மொழிவேறுபாடு, செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான போதிய இடவசதியின்மை உள்ளிட்ட பல காரணிகளால் தமது முன்னேற்றம் தடைப்படக் கண்டனர்.

தமக்கு கிடைக்கும் சேவைகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்யும் முகமாக, தமக்கானதொரு சமூக நிலையத்தை அமைக்கவென கனேடிய தமிழர்கள் ஒரு தசாப்தகாலமாக பல்வேறுவிதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்துள்ளார்கள். அந்த முன்னெடுப்புகளின் பலாபலனாகவே ஸ்காபரோவின் வடகிழக்குப் பகுதியிலே தமிழர்களுக்கான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதோடு ஏனைய சமூகத்தவர்களும் பயனடைந்துகொள்ளத்தக்க வகையிலானதொரு சமூக நிலையத்தை அமைக்கும் இந்தத்திட்டம் உருவெடுத்துள்ளது.

2016ன் குடித்தொகை மதிப்பீட்டின் அடைப்படையில் தொறொன்ரோ பெருநகரின் வரைபடத்தை நோக்கும்போது தமிழ் சமூக மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஸ்காபரோவின் வடகிழக்குப்பகுதியிலேயே தமிழர்கள் பெருமளவு செறிந்திருப்பது தெரியும் (காண்க உரு 1). தொறொன்ரோவின் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கினால் மார்க்கம் நகரின் தென்கிழக்குப் பகுதியிலும் (காண்க உரு 2) பிக்கறிங் நகரிற்கும் ஏஜக்ஸ் நகரிற்கும் இடைப்பட்டு ஸ்காபரோவின் வடகிழக்குப் பகுதிக்கு சற்று கிழக்கே அமைந்துள்ள பகுதியிலும் (காண்க உரு 3) தமிழர்களின் செறிவு அதிகமாக இருப்பதை 2016ன் குடித்தொகை மதிப்பீடு சுட்டுகிறது.

Census Map showing concentration of Tamil speaking residents in the City of Toronto (2016).

உரு 1: தொறொன்ரோ நகரில் தமிழ் பேசும் மக்களின் செறிவைக்காட்டும் குடித்தொகை வரைபடம் (2016)

தமிழர்கள் பாரம்பரியமாக வலுவான குடும்பப் பிணைப்பைப் பேணுவதோடு, நாடுகடந்தும் இயங்கும் ஊர் நலன்புரிச் சங்கங்கள் ஊடாக தமது பூர்வீக ஊர்களுடனும் தொடர்பைப் பேணி வருகிறார்கள். கடந்த சில தசாப்தங்களாக புதிய வரவாளர்களுக்கு ஆதரவு வழங்கியும், அவர்கள் தமது பூர்வீக இருப்பிடத்தை உத்தியோக பூர்வமாக நிரூபிப்பதற்கு வேண்டிய உறுதிமொழியை வழங்கியும் இந்த ஊர்ச்சங்கங்கள் அவர்களுக்கான வளநிலையங்களாக செயற்பட்டு வந்துள்ளன. இது ஸ்காபரோ, மார்க்கம், பிக்கறிங் நகரங்களில் தமிழர்களின் செறிவு அதிகரிப்பதற்கானதொரு காரணமாக அமைந்தது எனலாம். இந்தச் சமூகங்கள் வளர்ந்து வளமடைய திட்டமிடப்பட்டுள்ள தமிழ் சமூக நிலையத்தால் நன்மையடையப்போகும் மக்கள் தொகையும் அதிகரிக்கும். ஸ்காபரோவின் தென்கிழக்கில் முன்மொழியப்பட்டுள்ள இடத்தின் அமைவு பொதுப்போக்குவரத்தை நாடுபவர்களுக்கும் அண்மித்த பகுதிகளிலிருந்து வாகனங்களைச் செலுத்திவருபவர்களுக்கும் வசதியானதாக இருக்கும் என எதிர்பார்க்ககப்படுகிறது.

Census Map showing concentration of Tamil speaking residents in the City of Markham (2019).

உரு 2: மார்க்கம் நகரில் தமிழ் பேசும் மக்களின் செறிவைக்காட்டும் குடித்தொகை வரைபடம் (2019)

Census map showing concentration of Tamil speaking residents in the Durham region (2016).

உரு 3: டியூரம் பகுதியில் தமிழ் பேசும் மக்களின் செறிவைக்காட்டும் குடித்தொகை வரைபடம் (2016)

ஒரு தமிழ் சமூக மையம்

மாநகர, மாநில, தேசிய மட்ட அரசியலாளர்களினதும், பல தரப்பட்ட குமுக அங்கத்தவர்களினதும், குமுகங்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கவென உருவாக்கப்பட்ட பல்வேறு அமைப்புக்களினதும் ஆதரவோடு, 2019 மார்ச் மாதத்தில் பொதுக்கூட்டமொன்று கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்திலே தமிழ் குமுகத்தின் தேவைகள் பற்றியும் அது எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன்மூலம் ஸ்காபரோவின் வடகிழக்குப் பகுதியில் மட்டுமன்றி, குறிப்பிட்ட இந்த மக்கள்தொகையினருக்கும் சேர்த்து, தற்போதுள்ள சேவைக் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கான சமூகசேவை வழங்கும் வெளிகளை திட்டமிடுவதிலும் பயன்படுத்துவதிலும் நெகிழ்வானதொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என கண்டறியப்பட்டது.

பல்லாண்டுகாலமாக செயற்பட்டுவரும் சமூக அமைப்புக்களும் தொழில் முனைவர்களும் ஒரு தசாப்தமாக முன்னெடுத்த பூர்வாங்க செயற்பாடுகளின் அடுத்த கட்டமாக, ஒரு தமிழ் சமூக நிலையத்தை வடிவமைத்து, கட்டியெழுப்பி, நிர்வகிப்பதன் ஏதுநிலையை மேற்பார்வை செய்வதற்காக வழிநடத்துக் குழுவொன்று தமிழ் சமூகத்தால் உருவாக்கப்பட்டது. பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் உள்வாங்கிய இந்தக்குழு பண்பாடு, கொடையளிப்பு, கலைகள், தொழில்முனைவு, சமூகசேவை, கல்வியியல், குமுக இயல்திறன் மேம்பாடு ஆகிய துறைகளிலே பன்னெடுங்காலமாக குமுகத்திற்கு சேவையாற்றியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களினதும் அதன் பின்னரான கருத்தறியும் செயற்பாடுகளில் பங்குபற்றியவர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு - தமிழ் சமூக மையமானது பன்முகத்தன்மையுள்ளதாயும், புத்தாக்கமுடையதாயும், பன்நோக்கமுடையதாயும், சமயசார்பற்றதாயும் அமைந்து வளர்ந்து வரும் பல்லியல்புள்ள தமிழ்க் கனேடிய குமுகத்தின் சமகாலத்தேவைகளையும் எதிர்காலத் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய சேவைகளையும் வெளிகளையும் தன்னகத்தே கொண்டு தமிழர்கள் ஒருங்கிணையும் மையமாக அமையவேண்டும் என திட்டமிடப்படுகிறது. உடற்பயிற்சிக்கூடம், வெளியக விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கிற்கான வெளிகளையும், நூலகம், அருங்காட்சியகம், அரங்கம் உள்ளிட்ட பண்பாட்டு வெளிகளையும், குமுக அங்கத்தவர்கள் கல்வித் தேவைகளுக்கும் ஒருங்கிணைவிற்கும் பயன்படுத்தக்கூடிய பலநோக்கு வெளிகளையும் இந்த மையம் தன்னகத்தே கொண்டிருக்கும்.

தொறொன்ரோ பெரும்பாகம் 122000 தமிழர்களைக் கொண்டிருந்தபோதும், இந்த தமிழ் சமூக மையமானது ஸ்காபரோவில் வசிக்கும் 500முதல் 900 வரையான தமிழ் குடும்பங்களுக்கும் (2016 குடித்தொகை மதிப்பீட்டின்படி), டியூரம் பகுதியில் வசிக்கும் 236 முதல் 500 வரையான குடும்பங்களுக்கும், மார்க்கம் நகரின் தென்பகுதியில் வசிக்கும் 750முதல் 1961வரையான தமிழர்களுக்கும் (2019 குடித்தொகை மதிப்பீட்டின்படி) சேவையாற்றவேண்டிய நிலை தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொறொன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் 122000 வரையான தமிழர்கள் (2016 குடித்தொகை மதிப்பீட்டின்படி) அரங்கில் நிகழும் குறிப்பிட்ட பண்பாட்டு நிகழ்வுகளுக்காகவும் வெளியக விளையாட்டுத்திடல்களில் நிகழும் சமூக நிகழ்வுகளுக்காகவும் இந்த நிலையத்தை நாடக்கூடியதாக இருக்கும்.

Census map showing concentration of Tamil speaking residents in the Durham region (2016).

உரு 3: டியூரம் பகுதியில் தமிழ் பேசும் மக்களின் செறிவைக்காட்டும் குடித்தொகை வரைபடம் (2016)

மொழிமாற்றம் செய்யத்தக்க பண்பாட்டு நிகழ்வுகள் பல்வேறு பண்பாட்டுக் குமுகங்களுக்கிடையிலான தொடர்பாடலுக்கு மட்டுமன்றி தலைமுறைகளுக்கிடையிலான பண்பாட்டுப் பகிர்வுக்கும் வழிசமைக்கும். அணுகுவதற்குத் தடைகளற்றதும் உள்வாங்கும் தன்மையுடையதுமான வெளிகள் குமுகத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதோடு குமுகங்களுக்கு உள்ளேயும் குமுகங்களுக்கு இடையேயுமான உரையாடல்களைத் தூண்டும். சேவைப்பற்றாக்குறைகளை எதிர்நோக்குபவர்களாயும் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்களாயும் காணப்பட்டு சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதொரு மக்கட்கூட்டம் தமக்கு தேவையான பண்பாட்டுமயப்படுத்தப்பட்ட சேவைகளைப் பெற்று சமூக-பொருளாதார தளத்தில் முன்னேற முடியும்.

பன்நோக்குடைய இந்த வெளியின் மூலம், தமிழ் சமூக மையமானது, பொதுப்போக்குவரத்து வசதியுடையதொரு இடத்திலே சேவைகளை ஒருங்கிணைத்து, வலுவான, வாழ்தகைமையுடைய, சுகாதாரமான, சமூகத்துடன் இணைந்த, தன்முனைப்புள்ள ஒரு குமுகம் பூங்காக்களையும், பொழுதுபோக்கு நிலையங்களையும், பண்பாட்டு நிகழ்வுகளையும், பொதுச்சேவைகளையும் இலகுவாக நாடி தமது நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும். தமிழ் சமூக மையமானது மாநகர திட்டமிடலாளர்களும் அவர்களின் குமுக பங்காளர்களும் தமக்கு தேவையான சுகாதாரம் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு சார்ந்த தரவுகளைத் திரட்டவும் உகந்ததொரு தளமாக அமையும்.

இதனால், மாநகர திட்டமிடலாளர்களும் அவர்களின் குமுக பங்காளர்களும் சுகாதார குறைபாடு, ஏழ்மைநிலை, சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படல் போன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கான தமது சேவைகளை ஒருங்கிணைத்து அவை தேவையான குமுக அங்கத்தவர்களுக்கு அவற்றை வழங்க இலகுவாயிருக்கும். இந்தக் காரணிகள், தொறொன்ரோ பெரும்பாகத்தில் மட்டுமன்றி மார்க்கம், பிக்கறிங், ஏஜக்ஸ் ஆகிய நகரங்களிலும் சேவைக்குறைபாடுகளை எதிர்நோக்கிவந்த பாதிப்புக்குள்ளாகக்கூடிய குமுகங்கள் தமக்குத் தேவையான சேவைகளை இலகுவாகப்பெற்று சமூகத்துள் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யும்.