தமிழ் சமூக மையம்

தமிழ் சமூக மையம் 2025 அம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க செயற் குழுக்களுக்கான உறுப்பினர்களை அழைக்கிறது

பிப்ரவரி 2024

தமிழ் சமூக மையம் மிக முக்கியமான கால கட்டத்தில் நுழைந்துள்ளது.

தமிழ் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளை 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் நோக்கில் கட்டுமான அனுமதியை பெற்றுக் கொள்ளல் மற்றும் அதற்கான நிதிசேர் நடவடிக்கைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன. எமது மக்களின் நீண்டகாலக் கனவுகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் சமூக மையத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைவரின் முழுமையான ஒத்துழைப்பினை தமிழ் சமூக மையம் வேண்டி நிற்கின்றது.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி இடம்பெற்ற தமிழ் சமூக மையத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய பணிப்பாளர் சபை தெரிவு செய்யப்பட்டது. மிக விரைவில் இன்னும் பல முக்கியமான தகவல்களோடு தமிழ் சமூகத்தை நாம் சந்திக்கக் காத்திருக்கின்றோம்.

த.ச.மை நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேடுகிறது!

ஆகஸ்ட் 2023

தமிழ் சமூக மையம் எமது அமைப்பின் நிர்வாக சபையில் தொண்டாற்றுவதற்கென அர்ப்பணிப்புமிக்க உறுப்பினர்களைத் தேடுகிறது. தற்போதைய இயக்குனர் வரவிருக்கும் ஆண்டு பொது கூட்டத்தில் சபையின் காலியிடங்களை நிரப்ப தகுதியான வேட்பாளர்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிப்பார்கள்: இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் பகிரப்படும்.

தயவு செய்து வேலை இடுகை ஆங்கிலத்திலும், தமிழிலும் கீழே காண்க. உங்கள் வலைப்பின்னல்களில் பரவலாகப் பகிருங்கள். காலக்கெடு செப்டெம்பர் 17, 2023.

கடந்த இரு ஆண்டுகளில், எங்கள் இயக்குனர் குழு த. ச. மை. திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இவை அடங்கும்:

  • செயற்றிட்டத்தின் கட்டுமானத்திற்கென மாநில மத்திய அரசுகளிடமிருந்து 26.3 மில்லியன் நிதியுதவியை பெற்றுக்கொண்டது.
  • ரொறன்ரோ நகரிடமிருந்து, வடகிழக்கு ஸ்கார்பரோவில் 311 ஸ்டெய்ன்ஸ் வீதியில் $25 மில்லியன் மதிப்புள்ள நிலத்தை பெற்றுள்ளது.
  • கனடா வருமான முகவாண்மையால் அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டது.
  • கிரெடிட் முதற் தேசத்தின் மிசிசாகா மற்றும் ஹுரோன்-வென்டாட் ஆகிய பூர்வகுடி குமுகங்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டது.
  • தமிழ் குமுகத்துடனான ஆலோசனை செயல்முறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்-வடிவமைப்பு ஆய்வு வெளியிட்டது.
  • அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் பொருத்தமான நிதி மற்றும் திட்ட அறிக்கை உட்பட்ட தினசரி திட்ட நிர்வாகத்திற்காக திட்ட மேலாண்மை அலுவலகம் மற்றும் கணக்கியல் நிறுவனத்தை வேலைக்கமர்த்தியது.
  • முதன்மை ஆலோசகர் (கட்டிடக் கலைஞர்) பணியமர்த்தப்பட்டார்.

பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது

மார்ச் 2023

தமிழ் சமூக மையம் தற்போது எதிர்கொள்ளும் கட்டுமான செலவு சவால்களை சமாளிக்க உதவக்கூடும் சில புதிய வாய்ப்புகளை நாம் ஆராய்ந்துக்கொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்புகள் திட்டமிட்டபடி கட்டிடத்தை வெற்றிகரமாக முடிக்க உதவும் என்று நம்புகிறோம். ஏப்ரல் 1ம் திகதி நடைபெறவிருந்த சமூக பொதுக்கூட்டத்தை தள்ளிவைத்து, இன்னும் முழுமையான புதுப்பிப்போடு மீண்டும் உங்களிடம் திரும்புவோம்.

அதுவரை இங்குள்ள ஆலோசனையை நிரப்புங்கள்.

உங்கள் இதுவரையான ஆதரவிற்கு எங்கள் நன்றிகளை கூறி, உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

திட்ட நிலவரம் மற்றும் ஆலோசனை

சமூக ஆலோசனைகளை கருத்தில் கொண்டு மூன்றாம் தெரிவு அகற்றப்பட்டது.

மார்ச் 2023

எங்கள் முதல் சமூக ஆலோசனையை தொடர்ந்து, சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் சமூக மையத்தின் கட்டுமானச் செலவு மதிப்பீடு (தோராயமாக $40மில்லியன்), 2019 கட்டுமானச் செலவுகளின் அடிப்படையில், அமைந்தது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், கட்டுமானச் செலவில் 70% ஈடுசெய்ய ICIP நிதியுதவிக்கு விண்ணப்பித்தோம். 2022 இல், ஒரு திட்ட மேலாண்மை அலுவலகத்தையும் ஒரு முதன்மை ஆலோசகரையும் (கட்டிடக் கலைஞர்) பணியமர்த்தினோம். தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடையே த.ச.மை நடத்திய பரந்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஆலோசகர்கள் கட்டிடத்தின் வடிவமைப்பை மேம்படுத்தினர். திட்டக் குழு புதுப்பிக்கப்பட்ட கட்டுமானச் செலவு மதிப்பீட்டை நிறைவு செய்தது. இது எங்களின் 2019 விண்ணப்ப மதிப்பீட்டை விட கணிசமானவளவு அதிகமாக இருக்கிறது. 2019 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து, குறிப்பிடத்தக்க பொருள் மற்றும் உழைப்புக்கான செலவு அதிகரிப்புகள் உள்ளன, இது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை தோராயமாக 37% அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்புகள் தற்போதைய கட்டுமான செலவுகளின் மதிப்பீடுகளில் பிரதிபலிக்கின்றன. இதை போன்ற எல்லா கட்டுமானத் திட்டங்களும் அதே சிரமங்களை எதிர்கொள்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட முதல் வரவுசெலவுத்திட்டத்தை பராமரிப்பதற்கான வழிவகைகள் எதுவும் திட்டக் குழுவிற்கு இல்லை. மற்றும் வரவுசெலவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டத்தின் வடிவமைப்பு நோக்கத்தை மாற்றுவதற்கு இயக்குநர் குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற நாம் முழுமையான அர்ப்பணத்துடன் உள்ளோம். கட்டுமானச் செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ICIP திட்டங்களுக்கு நிதி வரம்பை அதிகரிப்பது குறித்து மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு நாங்கள் விசாரித்து எழுதியிருக்கிறோம். இந்த அதிகரிப்பைத் தணிக்க உதவக்கூடிய சாத்தியமான வேறு அரசாங்க நிதியுதவி வளங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த அதிகரித்த கட்டுமான வரவுசெலவுத் திட்டத்துடன், த.ச.மை. திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்க உங்கள் ஆலோசனையை நாடுகிறோம்.

இணையமூல கலந்தாய்வு

இந்த இணையமூல ஆலோசனையை நிரப்ப ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருடனும் பரவலாகப் பகிரவும்.

தமிழ் சமூக மையம் மீதான முதற்பார்வை

செப்டம்பர் 2021

தமிழ் சமூக மையம் எவ்வித வடிவத்தைக்கொண்டிருக்கலாம் என்பதைக்காட்ட முதலாவது வடிவமைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். வடிவமைப்புப் பற்றி நீங்கள் மேலதிகமாக அறிந்துகொள்வதற்கும் உங்கள் பின்னூட்டங்களை வழங்குவதற்குமான அலகு கீழே உள்ளது.

வடிவமைப்புக்கு முந்திய ஆய்வானது 311 ஸ்ரெயின்ஸ் வீதியின் வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எங்ஙனம் தமிழ் சமூக மையத்தால் சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என எடுத்துக்காட்டுகிறது.

வடிவமைப்புக்கான அடிப்படை வழிகாட்டிகளாக ஐந்து விடயங்களை நாம் மனதிலிருத்தினோம்: (1) கலந்தாய்வுகளின் அடிப்படையிலான சேவைத்திட்ட வெளிகள் (2) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு (3) பூர்வகுடிக் குமுகங்களை மதித்தல் (4) குடியிருப்பாளர்களின் கரிசனங்களுக்கான தீர்வுகள் (5) தமிழ்ப் பண்பாடும் வரலாறும்.

தமிழிரின் பாரம்பரியக் கட்டிடக்கலை (மைய முற்றம்), தமிழ்மொழியும் சங்க இலக்கியக் கோட்பாடுகளும் (ஐந்திணைகள்), புலப்பெயர்வையும் ஏதிலிவாழ்வையும் புகலடைவையும் உள்ளடக்கிய தமிழரின் அண்மைக்கால வரலாறு (கப்பல்) ஆகியவற்றால் வடிவமைப்பு அகத்தூண்டல் பெற்றுள்ளது.

வான்வழித் தோற்றம்

வான்வழித் தோற்றம்

இந்தத் தோற்றவுருவிலே, வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கட்டிடம், திறந்த திடல், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், புல்வெளி ஆகிய அமைவிடத்தின் அனைத்து முக்கிய அங்கங்களையும் காணலாம். ‘ழ’ என்ற எழுத்து நிலத்தோற்றத்திலே வரையப்பட்டிருப்பதைக் காணலாம். கட்டிடம் முல்லைநிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் உள்வாங்கி தட்டையாக மரங்களைக்கொண்டதொரு நிலையிலிருந்து உயர்ந்து மலைபோன்றதொரு உச்சியை அடைகிறது. சுற்றுப்புறத்திலே வாழ்பவர்களிலே பலர் நடந்தோ, ஈருருளியிலோ, பொதுப்போக்குவரத்திலோதான் வருவார்கள் என்பதைக் கருத்திலெடுத்தபோதும், போக்குவரத்துப் பற்றிய கரிசனங்களைத் தீர்க்கும் விதத்திலே போதியவளவு வாகனத் தரிப்பிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையிலான வாகனப் பாவனையை ஊக்குவிக்காத வகையிலே வாகனத்திலே வந்து இறக்குவதற்கும் ஏற்றிச்செல்வதற்குமான பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அயலிலே வாழ்பவர்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறைக் கூடியவளவு குறைக்கும் நோக்குடன் கட்டிடமானது வடகிழக்கு மூலையின் அந்தத்திலே, குறைவான உயரமுடையதாக அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் கூரையானது பசுமைக்கூரையாக அமைக்கப்பட்டு, ரூஜ் தேசிய நகர்ப்புறப் பூங்காவினை உயரத்திலிருந்து கண்டுகளிக்கும் வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதாக அமையும். பூங்காவினை கட்டிடத்துடன் இணைக்கும் வகையிலே நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கும். அமைவிடத்தைத் தெருவிலிருந்து மறைக்கும் விதமாக மரங்கள் நாட்டப்பட்டு அப்பகுதி இயற்கைச்செழுமையூட்டப்படும். அமைவிடமும் கட்டிடமும் பொதுவாக உயரம் குறைந்ததாக வைத்திருக்கப்பட்டு அனைவருக்கும் இலகுவான அணுகலை வழங்கவென நிலவடிவங்களும் நிலவியலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்திற்கெனப் பயன்படுத்தப்படும் வர்ணங்கள் யாவும் நிலத்தன்மையையொத்ததாய் அமைந்து கட்டிடமானது தனது இயற்கைச் சூழலுடன் இயல்புறக் கலக்க உதவும்.

மேற்குத் தோற்றம்

மேற்குத் தோற்றம்

ஸ்ரெயின்ஸ் வீதியிலிருந்து கிழக்கு நோக்கிப்பார்க்கும் தோற்றம் இது. வரவேற்கும் ஒரு கரையிலே தரைதட்டி ஒளிர்விட்டு நிற்கின்ற கப்பலொன்றை இந்தத் தோற்றத்திற் தெரியும் கட்டிடம் நினைவூட்டும். தமிழ் மக்களின் அண்மைக்கால வரலாறுகளான புலப்பெயர்வு, ஏதிலிவாழ்வு, புகலடைவு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையிலே நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளையுள்ளடக்கிய தோற்றம் இது. பல்வேறு நடந்துகடக்கக்கூடிய பகுதிகளையும் இந்தத் தோற்றத்திலே காணலாம். இவை தலைமுறைகளுக்கிடையேயான ஒன்றுகூடுதலுக்கும் ஊடாடுதலுக்குமானவை.

தென்மேற்குத் தோற்றம்

தென்மேற்குத் தோற்றம்

ஸ்ரெயின்ஸ் வீதியிலேயிருந்து வடகிழக்கு நோக்கிப் பார்க்கும்போதுள்ள இந்தத் தோற்றத்திலே அசைவுகளையும் செயற்பாடுகளையும் காட்டும் ஒரு இயக்காற்றுமிக்க வெட்டுமுகத்தை உணரலாம். வாகனத்தில்வந்து ஏற்றவும் இறக்கவுமான பகுதியை இது காட்டுவதுடன் இந்த அமைவிடத்தின் பல்வேறு வசதிகைள - ஈருருளிச் சவாரி, ஓட்டம், விளையாட்டு, வெளித்திடலை இரசித்தல் உப்பட – எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பதையும் இது காட்டுகிறது.

கிழக்குத் தோற்றம்

கிழக்குத் தோற்றம்

இந்தத்தோற்றம் வெளித்திடலில் இருந்து வடமேற்காக நோக்குவதாய் அமைந்துள்ளது. அயலவர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பதற்காக, வீட்டுமனைகளை நோக்கியுள்ள கப்பலின் பகுதி ஒளிக்கசிவுடைய பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கும். இது நூலகத்தையும், ஆவணக்காப்பகத்தையும், அருங்காட்சியகத்தையும் பயன்படுத்துபவர்கள் அமைதியாக நினைவுகளை மீட்பதற்கும் ஏதுவாயமையும். கப்பல் உருவாக்கப்பட்ட பொருட்களாவன ஒளிகசியும் தன்மையிலிருந்து ஒளி ஊடுருவும் தன்மைக்குமாறும்போது அது பாரம்பரிய தாயகங்களின் திசையை நோக்கியதாய் இருக்கும். இது தாயகத்தை நோக்கிப் பார்க்கையிலே எமது சிந்தை தெளிவுறுவதைக் குறியீட்டால் உணர்த்துவதாகும். கட்டிடத்தின் பசுமைக் கூரையிலிருந்து மக்கள் திடலிலே விளையாடுபவர்களைப் பார்ப்பதையும், ரூஜ் தேசிய நகர்ப்புறப் பூங்காவின் அழகிய காட்சிப்படிமங்களைக் கண்டுகளிப்பதையும் காணலாம். கப்பலின் அடிக்கட்டையை இதிலே தெளிவாகக் காணலாம்.